காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்போமே அதற்கு அர்த்தம் என்ன? எவ்வளவு அங்க ஹீனனாக, அறிவிற் குறைந்தவனாக இருந்தாலும் ஒரு தாய் தனது புத்திரனை வித்யாசமாகவோ அருவறுப்பாகவோ எண்ண மாட்டாள். உலகில் மற்ற எல்லா குழந்தைகளைகளை விட தனது பிள்ளையே அழகில் சிறந்தவன், உயர்ந்தவன் என்று எண்ணுவாள். இதற்குப் பெயர் தான் தாய்ப் பாசம்.
கிருஷ்ணனின் அத்தை குந்தி. அவளுக்கு ஒரு தங்கை சுருதகீர்த்தி என்று பெயர். அந்த ஸ்ருதகீர்த்திக்கு ஒரு பிள்ளை. சிசுபாலன் என்று பேர். அவன் அப்பா தாமகோஷன் ஒரு அரசன். சேடி அவன் ஆண்ட நாடு. பிறந்த போது மூன்று கண்களுடனும் நான்கு கரங்களுடனும் கழுதையின் குரலுடனும் அமானுஷ்யமாக பிறந்ததால் அவனை அபசகுனம், அவலக்ஷணம் என்று மற்றவர்கள் கருதினார்கள். ஒரு சிலர் அவனால் அந்த நாட்டுக்கே அரச குடும்பத்துக்கே ஆபத்து நேரலாம் என்று ஜோசியம் கூட சொன்னார்கள்.
பிறந்த குழந்தை சிசுபாலனை காட்டில் உயிரோடு எங்கவாது கொண்டு சென்று விட்டுவிட எல்லோராலும் முடிவெடுக்கப் பட்டது. அரசனும் அரசியும் மிகவும் மனம் உடைந்து போனார்கள்.
குழந்தையை காட்டில் எறிந்துவிட அவர்கள் முடிவெடுத்த சமயம் ஒரு அசரீரி குரல் கேட்டது.
"இவன் சாமான்ய குழந்தை அல்ல. மிக்க பலசாலி. இவனை யாராலும் வெல்ல முடியாது ஒரே ஒருவனை தவிர, அவனால் தான் இவனுக்கு மரணம்"
சுருதகீர்த்தி தாயல்லவா?
"யார் அவன், என் மகனை கொல்ல பிறந்தவன்?" என்று கவலையோடு அந்த அசரீரியாய் கேட்டாள்.
"எவன் மடியில் உன் மகன் இருக்கும்போது உன் மகனோடு பிறந்த அவனது நான்கு கரங்களும் செயலிழந்து கீழே விழுகிறதோ, எவன் மடியில் இருக்கும்போது அவனுடைய மூன்றாம் கண் மறைகிறதோ அவனால் மட்டுமே உன் மகனின் மரணம் நிகழும். வேறு எவராலும் உன் மகனை கொள்ளமுடியாது. மிகச் சிறந்த பலசாலி அவன்'' என்றது அசரீரி.
நாட்கள் ஓடியது. வாரமாகி, மாதங்களும் ஆகியது.
ஒருநாள் அத்தை வீட்டுக்கு கிருஷ்ணன் சென்றான். எல்லோரிடமும் செய்வது போல அத்தை அவன் மடியிலும் தன் குழந்தையை கிடத்தினாள். என்ன ஆச்சர்யம்? சிசுபாலனின் நான்கு கரங்களும் தானாகவே கீழே விழுந்தன. அவன் நெற்றிக்கண்ணும் மறைந்தது .
"அப்பா, கிருஷ்ணா, நீ ஒரு அதிசய பிறவி என்று எனக்கு தெரியும். ஆனால் நான் உன்னை கெஞ்சி உன் காலில் விழுந்து கேட்டு கொள்கிறேன். "என் மகன் என்ன தவறு செய்தாலும் அவனை தண்டிக்காதே. உன் அத்தை நான் உன்னிடம் கேட்கும் வரம் இது. தயவு செய்து இதை எனக்கு வாக்குறுதியாக கொடு." என்று க்ரிஷ்ணன் காலில் வீழ்ந்தாள் அத்தை சுருத கீர்த்தி.
"அத்தை, இதெல்லாம் எதற்கு வீணாக, நான் சிசுபாலனை கோபிக்கவே மாட்டேன். அவனை தண்டிக்க மாட்டேன், அவன் நூறு தப்பு செய்தாலும் கூட , போதுமா? கவலைப்படாதே. அதற்கு மேல் எது நடக்கவேண்டுமோ அது நடந்து விட்டு போகட்டுமே" என்று கண்ணன் அத்தைக்கு வாக்குறுதி கொடுத்தான்."
அப்புறம் என்ன நடந்தது ?
சிசுபாலனுக்கு அவன் நண்பன் ருக்மி தன் சகோதரி ருக்மிணியை மணமுடிக்க திட்டமிட்டான். ருக்மிணிக்கோ கிருஷ்ணன் மீது கொள்ளை ஆசை. அவனையே மணக்க முடிவெடுத்து அவனை அடைந்தாள் சிசுபாலனுக்கு கண்ணன் மேல் பொறாமை, த்வேஷம் எல்லாம் இருந்தும் பலமுறை கிருஷ்ணனை அவமதித்தும் கிருஷ்ணன் அமைதியாக பொறுமையுடனே இருந்தான் நூறு முறை பொருத்த கிருஷ்ணன் அடுத்த சந்தர்ப்பத்தில் சிசுபாலனை கொன்றான்.

No comments:
Post a Comment