அந்த அழகிய கிராமத்திற்கு ஒரு முனிவர் வந்தார். ஊருக்கு மத்தியில் இருந்த
மரத்தடியில் அமர்ந்தார்.
யாருடைய போதாத காலமோ என்னவோ,
யாருமே ஊரில் அவரைக்
கண்டுகொள்ளவில்லை. உபசரிக்கவில்லை. உணவிடவில்லை. என்ன ஏது என்று கேட்டிடவும் இல்லை.
முனிவர் அல்லவா? கோபம் வரும்தானே? அவருக்கு வந்த கோபத்தில் உடனடியாகச் சாபமிட்டார். அந்த ஊருக்கு மட்டுமா, இல்லை, உலகத்துக்கே...!
”இன்றிலிருந்து இன்னும் 50 வருடங்களுக்கு மழையே பெய்யாது வானம் பொய்த்துப் போகட்டும்!”
முனிவர் இட்ட சாபமென்றால் சும்மாவா? உடனே பலிக்குமே!
இந்த சாபம் பற்றி கேள்விப்பட்ட ஊரார் அனைவரும் நடுங்கி விட்டனர். என்ன செய்வது என்றே தெரியாமல் கவலையோடும் பயத்தோடும் அவரின்
காலடியில் விழுந்து மன்னிப்பு கேட்டனர். ஊஹூம்! இந்த சாபத்திற்கு விமோசனமே கிடையாது என்று கூறிவிட்டார் முனிவர். வேறு வழியின்றி அனைவருமே அவரின் காலடியின் கீழேயே செய்வதறியாமல் அமர்ந்து விட்டனர்.
மேலிருந்து இதைக் கவனித்த பரந்தாமன்
தனது சங்கினை எடுத்துத் தன் தலைக்கு வைத்துப் படுத்துவிட்டான். வேறு என்ன செய்ய? (ஆமாம்! பரந்தாமன் சங்கு ஊதினால்தான் மழை வரும் என்பது
நம்பிக்கை. இன்னும் 50 வருடங்கள் மழை பெய்ய வாய்ப்பில்லை என்பதால் இனி தன் சங்குக்கு ஓய்வு என்றே கீழே வைத்து விட்டான்…!)
நிலைமை இப்படி இருக்க, அந்த ஊரில் ஒரு வினோதமும் நடந்தது.
ஒரே ஓர் உழவன் மட்டும் தன் கலப்பையை எடுத்துக் கொண்டு தினமும் வயலுக்குச் சென்று வந்து கொண்டிருந்தான். அவனை அனைவரும் பரிதாபமாகவே பார்த்தனர். 'மழையே பெய்யாது' எனும்போது இவன் மட்டும் வயலுக்குப் போய் என்ன செய்யப் போகிறான் என்ற வருத்தம் அவர்களுக்கு! அவனிடம் கேட்டே விட்டனர், "நீ செய்வது
முட்டாள்தனமாக இல்லையா...?" என்று.
அதற்கு அவன் சொன்னான் பாருங்கள் ஒரு பதில்!... அது உழைப்பை மதிப்பதின் உச்சம்!
"ஐயா! 50 வருடங்கள் மழை பெய்யாது என்பது எனக்கும் தெரியும். என்ன செய்வது? உங்களைப் போலவே நானும் உழுதிடாமல் இருந்தால் 50 வருடங்கள் கழித்து மழை பெய்யும்போது, நிலத்தை உழுவது எப்படி என்பதே எனக்கு மறந்து போய் விட்டிருக்கும் அல்லவா...? அதனால்தான் தினமும் ஒருமுறையாவது உழுதுகொண்டு இருக்கிறேன்!" என்று சொல்லிவிட்டு அன்றைய தினத்துக்காக மீண்டும் உழப் போனானாம் அந்த உழைப்பாளிக்காரனான உழவன்.
இது வானத்தில் இருந்த அந்த
பரந்தாமனுக்குக் கேட்டது. உடனே அவரும் யோசிக்க ஆரம்பித்து விட்டார்...!
”அடடா! 50 வருஷங்கள் நானும் சங்கு ஊதாமல் இருந்தால், அதற்குப் பிறகு தேவையானபோது சங்கை எப்படி ஊதுவது என்று எனக்கும் மறந்து போய் விடாதா?” என்று நினைத்தார். நினைத்ததுதான் தாமதம்... உடனே சங்கை எடுத்து ஊதிப் பார்க்கவும் ஆரம்பித்து விட்டார்...! அவ்வளவுதான்...! இடி இடித்தது …மின்னல் மின்னியது... மழை பெய்ய ஆரம்பித்தது! ஆம். அந்த உழவன்உழைப்பின் மீது வைத்திருந்த பக்தி ஜெயித்து விட்டது!
"தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும் ”
என்பதுதானே நிதர்சனமான உண்மை?
எனவே மக்களே! எப்போதும் நாம்
உழைப்போம்... உயர்வோம்...!👍
No comments:
Post a Comment